பதிவு செய்த நாள்
22
நவ
2013
10:11
சிதம்பரம்: நடராஜர் கோவில் கட்டளைதாரர் குடும்பத்தினர், 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள உயர் ரக பவளமணி மாலையை, நடராஜர் சுவாமிக்கு காணிக்கையாக வழங்கினர். கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில், நடராஜர் கோவில் கட்டளைதாரர்களான, சிதம்பரம் சாகரி - விஸ்வநாத அய்யர் நினைவாக, அவரது குடும்பத்தினர், சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு அணிவிக்க, 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள, உயர் ரக, 85 பவளங்கள் கொண்ட இரண்டு பவளமணி மாலையை, காணிக்கையாக அளித்தனர். இதன் எடை, 961 கிராம் 600 மி.கி., உயர் ரகமான, இத்தாலியன் ரக பவளங்கள் உள்ள இம்மாலைகள், 160 கிராம் தங்கம் கலந்து, சிறந்த வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டுள்ளன. சாகரி விஸ்வநாத அய்யர் குடும்பத்தினர் சார்பில், கட்டளை தீட்சிதரும், சபாபதி சங்கீத கானசபா செயலருமான அய்யப்ப தீட்சிதர், கோவில் பொது தீட்சிதர்கள் அலுவலகத்தில், கமிட்டி நிர்வாகிகளிடம் நேற்று வழங்கினார். இந்த பவள மாலை, வரும் மார்கழி மாதம், ஆரூத்ரா தரிசனம் மற்றும் திருதேரோட்டம் விழாவின் போது அணிவிக்கப்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.