பதிவு செய்த நாள்
22
நவ
2013
05:11
சபரிமலையில் மட்டுமின்றி, உலகெங்கும் வீட்டுக்கு வீடு சரண கோஷம் முழங்கும் கார்த்திகை மாதம். இந்தக் கார்த்திகையும் மார்கழியும் வந்தாலே, ஹரிஹரி சுதன் ஐயன் ஐயப்பனைப் தரிசிக்கும் ஆவலுடனும் பக்தியுடனும் விரதம் இருக்கத் துவங்கிவிடுவார்கள் பக்தர்கள். வளம் பொருந்திய கோசல தேசத்தை. நந்திவர்மன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு பீமன் (மகாபாரத பீமன் அல்ல; இவன் வேறு) எனும் மகனும், அழகே உருவெனத் திகழும் சுகுணா, சுந்தராங்கி என இரண்டு மகள்களும் இருந்தனர். ஒருநாள், இளவரசிகள் இரண்டு பேரும் கானகத்தில் விளையாடச் சென்றார்கள். அங்கே, மனத்தை அடக்கியாள்பவரும், பரப்பிரம்ம வஸ்துவும், மகா சாஸ்தாவின் திருவடிகளில் சரணடைந்தவருமான சுவேதபாஜு எனும் முனிவர் தவமிருந்து வந்தார். அங்கு வந்த சகோதரிகள், அவரைக் கண்டதும் விளையாடுவதை நிறுத்தினார்கள். அவர் தவம் செய்வதையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் பாவம்... முனிவரின் பெருமையை, மகிமையை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
அங்கே மரத்தில், அவரின் தலைக்கு நேராக இருந்த தேன் கூட்டைப் பார்த்தார்கள். கற்களை எடுத்து வீசி, தேன்கூட்டைக் கலைத்தார்கள். சடசடவெனப் பறந்த தேனீக்கள், முனிவரின் உடல் முழுவதும் கொட்டித் தீர்த்தன. இதனால் வலி அதிகமானது முனிவருக்கு. தவத்தில் இருந்து கலைந்து எழுந்தவர், தாங்க முடியாமல் தவித்துக் கதறினார். தவம் கலைவதற்கும் தேனீக்கள் கலைந்து வந்து கொட்டியதற்கும் காரணமான அந்த இரண்டு பெண்கள் மீதும் கடும் கோபம் கொண்டார். அவர்கள் செடிகளாகக் கடவது என்று சபித்தார். அதன்படி சுகுணா என்பவள் நிலத்தில் வாழும் ஜவ்வந்தித் தாவரமாகவும், இளையவள் சுந்தராங்கி நீரில் வாழும் செங்கழுநீர்த் தாவரமாகவும் பிறந்தார்கள். இதை அறிந்த மன்னர், கலங்கிப் போனார். மகள்களுக்கு இந்தக் கதி நேர்ந்துவிட்டதே! என்று கண்ணீர் மல்கக் கதறினார். மனம் வருந்தி, அவர்களுக்குச் சாப விமோசனம் அளிக்கும்படி முனிவரை வேண்டினார்.
முனிவரும் சற்றே சாந்தம் அடைந்தார். உன் மகள்களின் சாபம் நீங்கி, நற்கதி கிடைக்க வேண்டும் எனில், மகா சாஸ்தாவை நோக்கித் தவம் செய். நல்லது நடக்கும் என அருளினார். அதையடுத்து, தன் மகன் பீமனுக்கு முடிசூட்டிய மன்னன், ராஜ வாழ்க்கையைத் துறந்து, கானகத்தை அடைந்து, வெறும் காற்றை மட்டுமே உட்கொண்டு, சாஸ்தாவை நோக்கிய தவத்தில் மூழ்கினான். அவனது தவத்தில் மகிழ்ந்த சாஸ்தா, யானை மீது அமர்ந்தபடி வந்து, அவனுக்குத் திருக்காட்சி தந்தருளினார். உன் தவத்தில் மகிழ்ந்தேன். முனிவரின் சாபம் உன் மகள்கள் இரண்டு பேருக்கும் வரமாக அமையட்டும். அதாவது, ஜவ்வந்திப் பூவாகவும் செங்கழுநீர்ப் பூவாகவும் மாறியிருக்கிற உன் மகள்கள், இனி என் பூஜையில் கட்டாயம் இடம்பெறுவார்கள். இந்த மலர்களைக் கொண்டு என்னை அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, யாகங்கள் செய்த பலனையும், ஹோமங்கள் வளர்த்த புண்ணியத்தையும் தந்தருள்வேன் என்றார். அன்று முதல், ஐயன் ஐயப்பனின் பூஜைகளில், ஜவ்வந்தியும் செங்கழுநீரும் உகந்த பூக்களாக அலங்கரிக்கத் துவங்கின!
நீங்களும் ஜவ்வந்திப் பூவையும் செங்கழுநீர்ப் பூவையும் கொண்டு, ஹரிஹரசுதனை பூஜை செய்து வேண்டுங்கள். மலர்களைப் போல், உங்கள் வாழ்க்கையை நறுமணம் கமழச் செய்வார், ஐயப்ப சுவாமி!