கவுமாரம் என்பது முருகனை முழுமுதற்பொருளாகக் கொண்ட வழிபாடு. இந்த முருகனையே பெண் சக்தியாக்கி வழிபடும்போது தேவி கவுமாரி என்று வழங்கப்படுகிறாள். கவுமாரி என்றால் இளையவள். அத்தி மரத்தின் அடியில் வீற்றிருப்பாள். மயில் இவளது வாகனம். இருகரங்களில் ஒன்று வரதஹஸ்தமாகவும், மற்றொன்று அபயஹஸ்தமாகவும் உள்ளது. மற்ற கைகளில் வேல், சேவல்கொடி, தண்டம், வில், பாணம், கந்தம், பத்மம், பத்ரம், பரசு ஆகியன இடம்பெற்றுள்ளன. முருகனைப் போலவே இவளுக்கும் சிவந்த மலர்கள் உகந்தவை. வீரத்தின் வெளிப்பாடாகத் திகழும் கவுமாரியை வழிபட்டோருக்கு துணிச்சல் அதிகரிக்கும். இவளை வழிபட செவ்வாய்க்கிழமை ஏற்றது. சப்தமாதர் வரிசையில் கவுமாரி ஆறாவதாக கொலு வீற்றிருப்பாள்.