பதிவு செய்த நாள்
25
நவ
2013
11:11
பெரம்பலூர்: எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில், மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில், ஸ்ரீ காகன்னைஈஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீலஸ்ரீ காகபுசுண்டர் சித்தர் பெருமானின், 24ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது. பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் பிரம்மரிஷிமலையில் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில், ஆண்டுதோறும் ஸ்ரீலஸ்ரீ காகபுசுண்டர் சித்தர் பெருமானின் குருபூஜை விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, 24ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது. இதையொட்டி மகா சித்தர்கள் டிரஸ்ட் நிறுவனர், அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகள் தலைமையில் காலை, 7 மணிக்கு குரு பூஜையும், கோ பூஜையும், அசுவ பூஜையும், 210 சித்தர்கள் யாக பூஜையும் நடந்தது. இதைத்தொடர்ந்து திருச்சி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் புகழேந்தி சாதுக்களுக்கு வஸ்திரதானத்தையும், ஏழை பெண்களுக்கு இலவச சேலைகளையும், திட்டக்குடி ராஜன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, பேனாக்களையும் வழங்கினர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கற்பூரசுந்தரபாண்டியன், ஓய்வு பெற்ற இணை கமிஷனர் சிவக்குமார், தொழுதூர் நெடுஞ்செழியன் கல்விக்குழும தலைவர் ராஜபிராதாபன், சென்னை ஜெகத்ராம்ஜி, செங்குந்தமகாஜன சங்க மாநில தலைவர் ராஜவேல், சிங்கப்பூர் ரத்தினவேலு, டாக்டர்கள் ராஜாசிதம்பரம், நவீதாலட்சுமி, கார்த்தீசன், எளம்பலூர் பஞ்சாயத்து தலைவர் ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை இணை நிறுவனர் ரோகினி, இயக்குனர்கள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் மற்றும் டிரஸ்ட் மெய்யன்பர்கள் செய்திருந்தனர்.