பதிவு செய்த நாள்
26
நவ
2013
11:11
சென்னை: பக்தியும், கலையும் மனதை இதமாக்கும், அமைதிப்படுத்தும், என, ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மன் கூறினார். ஜாகீர் உசேனின், ஸ்ரீ பாதம் நாட்டிய அகாடமி சார்பில், வைணவத்தில் சாதனை படைத்தவர்களுக்கு, "வைணவ செம்மல் விருது வழங்கும் விழா,சென்னையில் நடந்தது. விழாவை துவங்கி வைத்து, ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மன் பேசியதாவது: இவ்விழாவில், "வைணவ செம்மல் விருது பெற்றுள்ளவர்கள், வைணவத்திற்கு பல வகைகளில் சேவையாற்றியுள்ளனர். இவர்களை,"டிவி நிகழ்ச்சிகளிலும், கோவில் நிகழ்ச்சிகளும் தனித்தனியாகத்தான் பார்க்க முடியும். இப்படி ஒரு இடத்தில், இவர்களை ஒன்றாக சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பக்தியும், கலையும் மனதை இதமாக்கும். இங்கு விருது பெற்ற பெரியவர்கள், வைணவத்திற்கு பக்தி வழியாகவும், கலை வழியாகவும், நல்ல படைப்புகளாலும், பெரும் சேவையாற்றியுள்ளனர். வைணவம் சிறக்க இவர்களின் நற்பணிகள் தொய்வின்றி தொடரவேண்டும். இவ்வாறு, நரசிம்மன் பேசினார். விழாவில், நடிகை வைஜெயந்திமாலா பாலி, வெங்கடகிருஷ்ணன், அனந்தபத்மானாபாச்சாரி, திருகோஷ்டியூர் மாதவன், அனிதா ரத்னம், தாமல் ராமகிருஷ்ணன், நாகை முகுந்தன், கிருஷ்ணமாச்சாரி ஆகியோருக்கு, "வைணவ செம்மல் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில், அனிதா ரத்னம் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகானசபா செயலர் பிரபு, ரேவதி சங்கரன், உட்பட பலர் பங்கேற்றனர்.. ஸ்ரீபாதம் நாட்டிய அகாடமி சார்பில், ஜாகீர் உசேன் இவ்விழாவிற்கான ஏற்பாடு செய்திருந்தார்.