பதிவு செய்த நாள்
27
நவ
2013
10:11
திருப்பூர்: திருப்பூர் ஐயப்பன் கோவில் ஆறாட்டு உற்சவ ஊர்வல பாதை, போக்குவரத்து காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளது.திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஆறாட்டு விழா இன்று நடக்கிறது. காலை 9.00 மணிக்கு, சுவாமி பவானி புறப்படுதல்; 11.00 மணிக்கு, பவானி கூடுதுறையில் ஆறாட்டு உற்சவம் நடக்கிறது. மாலை 6.00 மணிக்கு, திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் இருந்து சுவாமி ஊர்வலம் துவங்குகிறது. வழக்கமாக, பூ மார்க்கெட் வழியாக, மாநகராட்சி ரோடு, குமரன் ரோடு வழியாக டவுன்ஹால் சென்று, வான வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்படும். இதன்படி, ஊர்வலம் சென்றால், போக்கு வரத்து நெரிசல் ஏற்படும்; ஊர்வல பாதையை மாற்றியமைக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர். துணை கமிஷனர் திருநாவுக்கரசு, அய்யப்பன் பக்தஜன சங்க நிர்வாகிகளை அழைத்து நேற்று ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, ஊர்வல பாதை மாற்றப்பட்டது. ஈஸ்வரன் கோவிலில் துவங்கும் ஊர்வலம், பெருமாள் கோவில், கஜலட்சுமி தியேட்டர் ரோடு, பழைய நொய்யல் பாலம், யூனியன் மில் ரோடு, சடையப்பன் கோவில் வீதி, வாலிபாளையம், கோர்ட் வீதி வழியாக குமரன் ரோடு, டவுன்ஹாலை அடையும். அங்கு வான வேடிக்கை முடிந்து, மேம்பாலம் வழியாக காலேஜ் ரோடு செல்லும் வகையில் ஊர்வல பாதை மாற்றப்பட்டுள்ளது, என, ஐயப்பன் கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.