கன்னியாகுமரியில் ரூ.6 கோடி செலவில் 27 அடி உயர ஆஞ்சநேயர் சிலை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2013 11:11
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ரூ.6கோடி செலவில் 27 அடி உயர ஆஞ்சநேயர் சிலையுடன் ராமாயண தரிசன கண்காட்சி கூடம் கட்டுமான பணி தொடங்கியது. கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் விவேகானந்தகேந்திர நிறுவனம் சார்பில் ரூ.6கோடி செலவில் ராமாயண தரிசன கண்காட்சி கூடம் அமைக்கப்பட உள்ளது. இந்த கண்காட்சி கூடம் 7ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இந்த கண்காட்சி கூடத்தில் ராமாயண காட்சிகளை விளக்கும் வகையில் மூலிகைகள் மற்றும் இலைகளால் ஆன 108 சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த கண்காட்சியின் நுழைவுவாயிலில் ஒரே கல்லினால் செய்யப்பட்ட 27 அடி உயர கதாயுதத்துடன் கூடிய வீர ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட உள்ளது. 9அடி உயர பீடத்தின் மேல் 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை வடிவமைக்கப்பட உள்ளது. இந்த ராமாயண கண்காட்சி கூடத்தை கன்னியாகுமரி கடலின் நடுவில் அமைந்துள்ள விவேகான ந்தர் மண்டபத்தை வடிவமைத்த சிற்பி எஸ்.கே.ஆச்சாரியின் மகன் தட்சிணாமூர்த்தி ஸ்தபதி வடிவமைத்து உள்ளார். இதற்காக, விவேகானந்த கேந்திர நுழைவுவாயிலில் அமைந்துள்ள சபாகிரகம் என்ற அவைக்கூடம் ராட்சத பொக்கலைன் (ஜே.சி.பி) இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டு கட்டுமான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. விவேகானந்தர் மண்டபத்தை நிறுவிய மும்பையைச் சேர்ந்த ஏக்நாத்ஜி ராணடேயின் 99-வது பிறந்த நாளையொட்டி இந்த ராமாயண தரிசன கண்காட்சி கூடம் கட்டுமான பணி தொடங்கி உள்ளது. அவரது 100-வது பிறந்த நாளையொட்டி (2014-2015-ம் ஆண்டுக்குள்) ராமாயண தரிசன கண்காட்சி கூடம் கட்டுமான பணியை 2 ஆண்டில் முடித்து திறப்பு விழா நடத்த விவேகானந்த கேந்திர நிறுவனம் முடிவு செய்து உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடத்தப்பட்டு ராமாயண தரிசன் கண்காட்சி கூடம் கட்டுவதற்கான அஸ்திவாரம் தோண்டும் பணி முழு வீச்சுடன் நடந்து வருகிறது.