பதிவு செய்த நாள்
28
நவ
2013
10:11
சபரிமலை: பம்பையில், வெளிமாநில பக்தர்களுக்கு, 24 மணி நேரமும் அன்னதானம் வழங்க, தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. சபரிமலையில் ஓட்டல்களை மூடி விட்டு, அன்னதானத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தற்போது, சன்னி தானத்திலும், பம்பையிலும், தினமும் காலையில் உப்புமா, மதியம் கூட்டு வகைகளுடன் சாதம், இரவு கஞ்சி, என தேவசம்போர்டு சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. பம்பையில், மேலும் ஒரு அன்னதான திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, பம்பை மணல்பரப்பில், ஓட்டலை மூடி விட்டு, அங்கு 24 மணி நேரமும் இட்லி மற்றும் பொங்கல், சாம்பார் என அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக, மின்சார நீராவி அடுப்பு பயன்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் வெளி மாநில பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதற்கு, கேரள ஐகோர்ட்டும் அனுமதி அளித்துள்ள நிலையில், அடுத்த வாரம் இத்திட்டம் செயல்பட துவங்கும், என தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.