பதிவு செய்த நாள்
11
ஜன
2025
10:01
சபரிமலை:: சபரிமலையில் மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் இன்று பேட்டை துள்ளல் நடக்கிறது. நாளை பந்தளத்தில் இருந்து திருவாபரண பவனி புறப்படுகிறது.
சபரிமலையில் மகரஜோதி தரிசனத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. சபரிமலையில் மண்டல, மகர விளக்கு கால சீசன் தொடங்கியதும் எருமேலியில் பேட்டை துள்ளல் தொடங்கினாலும் மகரஜோதிக்கு முன்னோடியாக அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த இரண்டு குழுவினரும் பேட்டை துள்ளி முடிந்ததும் எருமேலியில் பேட்டை துள்ளல் நிறைவு பெறும். இன்று மதியம் 12:00 மணியளவில் ஆகாயத்தில் வட்டமிடும் கருடனை பார்த்து அம்பலப்புழா பக்தர்களும், மாலை 3:00 மணிக்கு ஆகாயத்தில் ஒளிவிட்டு பிரகாசிக்கும் நட்சத்திரத்தை பார்த்து ஆலங்காடு பக்தர்களும் பேட்டை துள்ளுவர். இதையொட்டி எருமேலியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை பந்தளத்தில் இருந்து திருவாபரண பவனி புறப்படுகிறது. பந்தளம் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள திருவாபரணங்கள் மகரஜோதி நாள் முதல் 5 நாட்கள் சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டிருக்கும். சபரிமலையில் குடிகொண்ட ஐயப்பனை காண பந்தள மன்னர் ஆபரணங்களுடன் வந்ததை நினைவு கூறும் வகையில் இந்த திருவாபரண பவனி நடக்கிறது. நாளை மதியம் ஒரு மணிக்கு பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் உச்ச பூஜை முடிந்ததும் திருவாபரண பவனி புறப்படும். இது ஜன.14 மாலை 6:20 மணிக்கு சன்னிதானம் வந்தடையும். ஜன.13 ல் பம்பையில் பம்பை விளக்கும், பம்பை விருந்தும் நடைபெறும். ஜன. 14 காலை 8:45 மணிக்கு மகர சங்கரம பூஜையும், அன்று மாலை 6:30 மணிக்கு பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கிறது.