பதிவு செய்த நாள்
28
நவ
2013
05:11
நங்கநல்லூர் ஐயப்பனுக்கு கோடி அர்ச்சனை விழா!
சென்னை நங்கநல்லூர், ஆதம்பாக்கம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள ஐயப்ப பக்தர்கள் ஒன்றிணைந்து, நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகில் உள்ள ஐயப்பன் கோயிலில், கோடி அர்ச்சனை செய்து ஐயனை வழிபட முடிவு செய்து, அதற்கான ஏற்பாட்டில் இறங்கியுள்ளனர். டிசம்பர் 7-ஆம் தேதி காலை 5 மணிக்குத் துவங்கி, 22-ஆம் தேதி வரை நடைபெறும் கோடி அர்ச்சனை விழா, சுமார் 54 லட்சம் ரூபாய் செலவில் நடைபெறுவதாகத் தெரிவிக்கின்றனர், பக்தர்கள். கேரள தந்திரிகள், நங்கநல்லூர் மணிகண்ட சுவாமி, டிரஸ்ட் ஸ்தாபகர் வெங்கட்ராம குருஜி, வேதகான சாஸ்தா டிரஸ்ட் கிருஷ்ணன் குருஜி ஆகியோர் தலைமையில் நடைபெறும் கோடி அர்ச்சனை விழாவில் தினமும் சிறப்பு பூஜை, விசேஷ பிரசாதம், அன்னதானம் ஆகியவை சிறப்புற நடைபெறும்.
கும்பத்தில் ஆவாஹனம் செய்யப்பட்ட நெய், தேன், விபூதி ஆகியவற்றை நிறைவு நாளில் எடுத்து, அங்கே சன்னதியில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகம் செய்து, அதைப் பிரசாதமாகப் பக்தர்களுக்கு வழங்க உள்ளோம். தவிர, தினமும் மதியம் மற்றும் இரவில் அன்னதானமும் நடைபெறுகிறது. இந்தப் பூஜைக்கு அரிசி, பணம், திரவியம் எனப் பொருளுதவி செய்வதும் வரவேற்கப்படுகிறது. குறிப்பாக, கோடி அர்ச்சனையில் கலந்துகொண்டு, ஐயப்ப சுவாமியின் நாமாவளியைச் சொல்வதற்கு தினமும் 700-க்கும் குறையாத அன்பர்கள் தேவை. ஆர்வம் உள்ள ஐயப்ப பக்தர்கள் தாராளமாகக் கலந்துகொள்ளலாம் என்கிறார்கள் நிர்வாகிகள்.