முருகப்பெருமானின் வரலாற்றைக் கூறும் கந்தபுராணம் தோன்றிய தலம் காஞ்சிபுரம் குமரக்கோட்டமாகும். தனது பெற்றோரான ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி ஆகிய இருவருக்கும் நடுவில் குமரக்கோட்ட முருகன் வீற்றிருக்கிறார். வள்ளி, தெய்வானை ஆகிய தேவியர் இல்லாமல் மூலவர் முருகன் பிரம்மச்சாரியாகத் தனித்து அருள்புரிகிறார். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் புரியாத நான்முகனைச் சிறையில் இட்ட பிறகு படைப்புத்தொழிலை முருகன் இத்தலத்தில் இருந்து செய்ததாக தல வரலாறு கூறுகிறது. சிவத்தலங்களில் காசிபோல, முருகப்பெருமானுக்குரிய கோயில்களில் சிறந்ததாக இது திகழ்கிறது. கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்தை எழுதிய போது அதைத் திருத்திக் கொடுத்த பெருமை குமரக்கோட்டத்து முருகனைச் சாரும். இந்நூலில் இடம்பெறும் திகடக்சக்கரம் என்ற சொல்லுக்கு இலக்கணவிளக்கம் தருவதற்காக முருகன் தமிழ்ப்புலவராக வந்து அருள்புரிந்தார். 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த கச்சியப்பசிவாச்சாரியார் இக்கோயிலில் பணிபுரிந்தவர். அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் போன்ற முருகனடியார்களும் குமரக்கோட்டத்து முருகப்பெருமானைப் போற்றி வணங்கியுள்ளனர்.