பதிவு செய்த நாள்
30
நவ
2013
10:11
பவானி: பவானி கூடுதுறையில், திருப்பூர் கல்லூரி ரோட்டில் உள்ள ஸ்ரீஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு விழா நடந்தது. ஸ்ரீஐயப்பன் சுவாமிக்கு, 54ம் ஆண்டு ஆராட்டு விழாவில், ஓடக்காடு விநாயகர் கோவிலில், ஐயப்ப ஸ்வாமி பள்ளி வேட்டைக்கு செல்லுதல் நடந்தது. ஸ்வாமியை ஆனந்தப்படுத்தும் விதமாக, பவானி சங்கமேஸ்வரர் கோவில் காவிரியில் ஆராட்டு விழா நடந்தது. இதில், ஐயப்ப உற்சவ மூர்த்திக்கு, மஞ்சள், தயிர், பால், நெய், விபூதி போன்ற அபிஷேகம் நடந்து, மூன்று முறை ஐயப்ப ஸ்வாமி காவிரி ஆற்றில் மூழ்கி எழுந்தார். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது கேரளா திருமேனி ஸ்ரீதர், திருப்பூர் திருமேனி சதீஸ் குழுவினர் ஆராட்டு செய்தனர். பவானியில் இருந்து, திருப்பூர் ஈஸ்வரன் கோவில் சென்று அடைந்ததும், மாலை 5 மணிக்கு ஐயப்ப சுவாமி யானை மீது பஞ்சவாத்தியங்கள் முழங்க பக்தர்களுக்கு தரிசனம் தந்து, கோவிலை அடைந்தார். ஐயப்ப பக்த ஜன சங்கத்தின் தலைவர் ஆறுமுகம், பொதுச்செயலாளர் மணி, பொருளாளர் முருகேசன் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.