பதிவு செய்த நாள்
02
டிச
2013
10:12
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில், மார்கழி மாத அதிகாலையில், சுப்ரபாதம் ஒலிக்க நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோவில், 108 வைணவ திருத்தலங்களில், 63வது தலமாக விளங்குகிறது. இங்கு, சுவாமி தரையில் படுத்து காட்சியளிக்கிறார். நிலம் சார்ந்த பிரச்னைகள், புதிய வீட்டை தடங்கலின்றி கட்டுதல் ஆகியவற்றுக்கு பரிகார தலம் இது.இங்கு அதிகாலை மற்றும் மாலை வேளைகளில், மங்கல இசை ஒலிப்பது நீண்டகால வழக்கம். நாள்தோறும் அதிகாலை 4:30 மணி முதல் காலை 6:00 மணி வரை, மங்கல இசை, சுப்ரபாதம், பஜனை பாடல்கள், மாலை வேளையில், விஷ்ணு சகஸ்ரநாமம் போன்றவை ஒலிபரப்பாகும். மார்கழி மாத அதிகாலையில், திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருப்பாவை ஒலிபரப்பப்படும். கோவிலில் ஒலிபரப்பும் அத்தகைய பாடல்களை, நகரம் முழுவதும் உள்ள, பக்தர்கள் கேட்டு பரவசமடைந்தனர். கடந்த சில ஆண்டுகளாக, இத்தகைய பாடல்களை ஒலிக்க விடும் நடைமுறை இல்லை. ஒலி பெருக்கி கருவிகளை பயன்படுத்தக்கூடாது என்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உத்தரவால், இது நிறுத்தப்பட்டது. ஒலி பெருக்கி மூலம் ஒலி பரப்புவதற்குதான் வாரியம் தடை விதித்தது. எனவே கோவில் வளாகத்தில், மங்கல இசை ஒலிக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.