கேரளாவில் ஐயப்பனுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதோ அதே அளவுக்கு பகவதி அன்னை கோயில்களிலும் அம்பிகை வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பத்தணந்திட்டையில் இருந்து ரான்னி செல்லும் பாதையில் இட்டிகைப்பாறையில் இருந்து ஐத்தலை செல்லும் ரோட்டில் பகவதி குன்று தேவி கோயில் உள்ளது. ராஜராஜேஸ்வரியாக தேவி இங்குகுடி கொண்டுள்ளார். சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமை உடையதாக இந்த கோயில் கருதப்படுகிறது. பரசுராமர் கட்டிய இந்த கோயிலில் 108 படிகள் உள்ளது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற இடப்பள்ளி தேவியின் சக்தி இங்கு குடி கொண்டுள்ளது. சங்கு, சக்கரம் ஏந்தி தேவி நின்றநிலையில் காட்சி தருகிறாள். காலை 5.30 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். நல்ல இனிப்புடைய நெய்பாயாசம், புஷ்பாஞ்சலி ஆகியவை முக்கிய வழிபாடுகளாகும். பரசுராமர் கட்டிய கோயில் என்பதால் ஆடி அமாவாசைக்கு இங்கு அதிகமாக பக்தர்கள் வந்து தர்ப்பணம் நடத்துகின்றனர். குழந்தை வரம் வேண்டுபவர்கள் பிறக்கும் குழந்தைகளை தேவியிடம் சமர்ப்பிக்கும் அடிமை முக்கிய வேண்டுதலாகும்.
கணபதி, நாகராஜா, நாகயக்ஷி, பிரம்மா ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளது. மலைப்பகுதியான ரான்னியில் முதலாவதாக கட்டப்பட்ட கோயில் இது என்று நம்பப்படுகிறது. கார்த்திகை முதல் தேதி முதல் மார்கழி 17ம் தேதி வரை இங்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. சபரிமலை பயணத்தின் போது பக்தர்கள் இந்த அம்பிகையையும் வழிபடலாம்.