தென்னகத்தின் கங்கை என அழைக்கப்படும் பம்பை நதிக்கரையில் அமைந்திருப்பது கன்னிமூல விநாயகர் கோயில். புண்ணிய நதி பம்பையில் குளித்து நதிக்கரையில் உள்ள கன்னிமூல கணபதியை வணங்கி, அவருக்கு தேங்காய் உடைத்து பக்தர்கள் தங்கள் பயணத்தை தொடருகின்றனர். நீலிமலையும், செங்குத்தான் அப்பாச்சி மேடும் கடக்கும் பயணம் மங்களகரமாக நிறைவேற கணபதியின் அருள் வேண்டப்படுகிறது. தற்போதுள்ள கன்னிமூல கணபதி கோயில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் புனர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது அந்த கோயிலில் இருந்த கணபதி சிலை மாற்றப்பட்டு புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பொதுவாக கோயில்களில் புனர்பிரதிஷ்டை நடக்கும்போது பழைய சிலைகள் நீர்நிலைகளில் போடப்படும். ஆனால் பம்பையில் மாற்றப்பட்ட பழைய சிலையை நீர்நிலையில் போடாமல், கோயிலின் ஒரு பகுதியில் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பம்பையில் மகரவிளக்கு தினத்தில் கோர விபத்து நடந்து சுமார் 40 பேர் இறந்தனர். இதைத் தொடர்ந்து சபரிமலையில் தேவபிரஸ்னம் நடத்தப்பட்டது.
தேவபிரஸ்னம் என்றால் கடவுள் ஜோதிடமாகும். கோயிலில் தகாத செயல்கள் நடந்தாலோ, முறைகேடுகள் நடந்தாலோ, கோயிலில் புனர்நிர்மாணப் பணிகள் செய்வது என்றாலோ கடவுளிடம் முன் அனுமதி கேட்பதே தேவபிரஸ்னமாகும். இதற்காக சோவியை குலுக்கிப் போட்டு நம் பூதிரிகள் ஜோதிடம் பார்ப்பார்கள். இப்படி தேவபிரஸ்னம் செய்து பார்த்ததில், பம்பையில் சக்திமாறாத ஒரு கணபதி சிலை கவனிப்பாரற்று இருப்பது தெரிய வந்தது. இந்த கணபதிக்கு பம்பையில் ஒரு சன்னதி கட்டப்பட வேண்டும் என்றும் தேவபிரஸ்ன முடிவில் கூறப்பட்டது. இதை தொடர்ந்து புதிய சன்னதி கட்டப்பட்டது. கன்னிமூலகணபதி கோயிலுக்கும், ராமர் கோயிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த சன்னதி கட்டப்பட்டுள்ளது. இதுவரை சபரிமலை சென்ற பக்தர்கள் இந்த சன்னதியை பார்த்திருக்க முடியாது. ஏனெனில் கடந்த ஆவனியில் தான் (மலையாள புத்தாண்டு) சன்னதி திறக்கப்பட்டது. இதற்கான பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் தாழமண் தந்திரி கண்டரரு மோகனரரு தலைமையில் நடந்தது. சபரிமலை செல்லும் பக்தர்கள் இனி பம்பையில் ஒரு கணபதிக்கு பதிலாக இரண்டு கணபதிகளை வழிபட்டு மலையில் பயணத்தை தொடரலாம்.