பத்தணம்திட்டை மலையாளப்புழா பத்ரகாளி தேவி கோயிலில் இந்த அதிசயம் நடக்கிறது. மலையாள தேசத்தின் உட்பகுதியில் 108க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னை பகவதி கோயில் கொண்டிருக்கிறாள். இவற்றில் பத்தனம்திட்டை மலையாளப்புழாவில் உள்ள பத்ரகாளி தேவி கோயிலும் ஒன்று. இந்த கோயில் 2500 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. 2002ம் ஆண்டில் ஐந்து கோடி ரூபாய் செலவில் இங்கு சதகோடி அர்ச்சனை மகாயக்ஞம் நடந்தது. 2 மாதம் தொடர்ந்து நடந்த இந்த யாகம் காரணமாக அன்னை மிகுந்த சக்தி பெற்று அருள்பாலித்து வருகிறாள்.
அன்னையின் திருக்கோலம் : மூலஸ்தானத்தில் ஐந்தடி உயரத்தில் எட்டு கைகளோடு, பூத, பிரேதங்களோடு, அம்மை போன்ற பயங்கரமான வியாதிகளை சம்ஹாரம் செய்கின்ற தலையோட்டு மாலையை தன் கழுத்தில் அணிந்து பயங்கரமாக அம்பாள் காட்சி தருகிறாள். அவளுக்கு மூன்று கண்கள் உள்ளன. கார்மேகத்தின் நிறத்தில் இருக்கிறாள். தாரகாசுரன் என்ற கொடிய அரக்கனை வதம் செய்யும் கோலத்திலும், வேதாளத்தின் கழுத்தில் ஒரு பாதத்தையும் வைத்திருக்கிறாள்.
பாயாச மகிமை : இங்கு பத்ரகாளிக்கு அங்கி சார்த்தப்படுவதில்லை. அலங்காரத்திற்காக பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட மூன்று கண்கள் மட்டும் சார்த்தப்படுகிறது. இருபத்து நான்கரை லிட்டர் அரிசி கொண்டு செய்யப்படும் சர்க்கரைத்தூணி என்ற கடும் கட்டி பாயாசம் இங்கு வழங்கப்படும் நைவேத்தியம் ஆகும்.
அதிசய மரம் : கோயிலுக்குள் ஒரு சுயம்பு சிவனும், சிவனுக்கு குடை பிடித்தாற்போல் கணிக்கொந்தை என்ற மரமும் இருக்கிறது. இந்த மரத்திலிருந்து தினமும் ஒரு பூ மட்டும்தான் கீழே விழும். அது சுயம்பு சிவனின் சிரசில் விழுவது தினமும் நடந்துவரும் தெய்வீக அற்புதமாகும்.
தேனீயின் ரீங்காரம் : இந்த கோயிலில் சப்த மாத்ருக்கள் எனப்படும் தேனீக்கூட்டம் உள்ளது. நாம் கோயிலுக்குள் நுழையும் போது நம் அருகில் பறந்துவரும் தேனீ, வெளியே வரும்போதும் நம் கண்ணில் தென்பட்டால் தேவி நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக அர்த்தம். தேனீயின் ரீங்காரம் கேட்டால் கூட கோரிக்கை நிறைவேறி விடும் என்கிறார்கள். தேனீக்கள் மூலமாக தேவி தங்களுக்கு அருள் வாக்கு சொல்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
திருவிழா : கார்த்திகை முதல் தேதி முதல் 45 நாட்கள் தேவிக்கு மிகவும் இஷ்டமான பாட்டு என்ற உற்சவம் கொண்டாடப்படுகிறது.
இருப்பிடம் : செங்கோட்டையிலிருந்து புனலூர் வழியாக பத்தனம்திட்டை சென்று, அங்கிருந்து கும்பழ என்ற ஊருக்கு செல்<லும் ரோட்டில் 9 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.