வடதமிழக பக்தர்கள் குமுளி, மற்றும் வண்டி பெரியாறு வழியாக ஐயப்பன் கோயிலுக்கு செல்கின்றனர். இந்த பாதை மலைப்பாதையாக இருந்தாலும், இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக உள்ளதால் ஐயப்பனைக் காணப்போவதால் ஏற்படும் மன அமைதியுடன் இயற்கை தரும் மன அமைதியையும் சேர்த்து சுமந்து செல்கிறார்கள். இந்த பாதையில் உள்ள வண்டி பெரியாறு ஐயப்ப பக்தர்களின் முக்கிய தங்குமிடமாகும். இங்கு நல்ல இயற்கையான குடிநீர் ஊற்றுகள் உள்ளது. வண்டி பெரியாறில் தான் பண்டைக்காலத்தில் சபரிமலையில் பணியாற்றிய ஊழியர்களும், மேல்சாந்தியும் தங்கியிருந்துள்ளனர். இதற்காக இங்கு ஒரு சத்திரம் கட்டப்பட்டிருந்தது.
சமீபத்தில் சபரிமலையில் நடந்த தேவ பிரஸ்தனத்தில் வண்டி பெரியாறில் ஐயப்பனின் சகோதரரான முருகபெருமான் இருப்பது தெரிய வந்தது. இவ்விடத்தில் முருகப்பெருமானுக்கு ஒரு கோயில் கட்டும்படி தேவபிரஸ்னத்தில் கூறப்பட்டது. இதன்படி வண்டிபெரியாறில் திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு முருகன் கோயில் கட்டியது. வண்டிபெரியாறு அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில், என்று இது அழைக்கப்படுகிறது. முருகனின் வேலேந்தி நிற்கும் முழுவடிவசிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வண்டிபெரியாறு வழியாக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இனி வழியில் முருகதரிசனமும் நடத்தி பயணத்தை தொடரலாம்.