சபரிமலை: சபரிமலையில் டிச.ஆறு பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகள் தொடங்கியது. டிச.6ம் தேதி சபரிமலையில் பாதுகாப்பு கடுமையாக்கப்படும். அன்றைய தினம் பக்தர்களின் இருமுடி பைகள் மற்றும் அனைத்து பொருட்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். தோள்பையில் இரும்பு போன்ற எந்த பொருட்களும் 18-ம் படி வழியாக கொண்டு செல்ல முடியாது. மொபைல் போன்களுக்கு அனுமதி கிடையாது. அடையாள அட்டை உள்ளவர்கள் கூட சன்னதான திருமுற்றத்தில் சோதனைக்கு <உட்படுத்தப்படுவார்கள். இப்படி பல்வேறு கோணங்களில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் சன்னிதானத்தில் சிறிது சிறிதாக தொடங்கி விட்டது. இதன்படி அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாத தொழிலாளர்கள் சன்னிதானத்தில் தங்கமுடியாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து போலீசார் வந்துள்ளனர். இவர்கள் பக்தர்கள் கூட்டத்துக்கு மத்தியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயில் சுற்றுப்புறங்கள் தொடர்ந்து நவீன கருவிகளால் சோதனை செய்யப்பட்டு வருகிறது. டிச.6 பாதுகாப்பு நடவடிக்கைகள் டிச.5ம் தேதி மதியத்துக்கு பின்னர் தொடங்கும் என்றும் டிச.ஏழாம் தேதி மதியம் வரை இது அமலில் இருக்கும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.