பிளாஸ்டிக்கை தவிர்த்து இருமுடி கட்ட பக்தர்களுக்கு வேண்டுகோள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2013 02:12
சபரிமலை: பிளாஸ்டிக்கை தவிர்த்து இருமுடி கட்டு கட்டி வருவதால் சபரிமலையில் சுற்றுச்சூழலும் புனிதமும் பாதுகாக்கப்படும் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலை பெரியாறு புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதியாகும். எனினும் கோயிலுக்கு வரும் லட்சோபலட்சம் பக்தர்களை கருத்தில் கொண்டு சில விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாள் தோறும் பெருகி வரும் பிளாஸ்டிக் குப்பைகள் சபரிமலை சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால் முடிந்த அளவு பக்தர்கள் இருமுடி கட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாமல் வரவேண்டும் என்று தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக அவல், பொரி, கற்கண்டு, முந்திரிபழம், மஞ்சள், குங்குமம், விபூதி, கற்பூரம் போன்ற பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் கொண்டு வராமல் இலை அல்லது பேப்பரில் பேக்கிங் செய்து கொண்டு வரலாம் என்றும், பக்தர்கள் தேவையில்லாத பொருட்களை சபரிமலையில் வீசி எறிவதற்கு பதிலாக ஊருக்கே திரும்பி கொண்டு செல்லலாம் என்றும் தேவசம்போர்டு ஆலோசனை தெரிவித்துள்ளது.
பக்தர்கள் அரிசியில் அன்னதானம்: பக்தர்கள் கொண்டு வரும் அரிசியை ஆங்காங்கே கொட்டுவதை தவிர்க்க வேண்டும். தற்போது அரிசி காணிக்கை என்று எழுதப்பட்டுள்ள இடத்தில் அரிசி வாங்கப்படுகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட ஊழியர்களிடம் அரிசியை தரம் பிரித்து வழங்க வேண்டும். கறுப்பு, வெள்ளை, பச்சையரிசி என தரம் பிரித்து வாங்கப்படுகிறது. இந்த அரிசியை தேவசம்போர்டு அன்னதானத்துக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளது. பக்தர்கள் கொண்டுவரும் அரிசியின் மூலம் மூன்று நேரமும் சிறப்பாக அன்னதானம் நடத்த முடியும் என்று தேவசம்போர்டு கருதுகிறது. பக்தர்களுக்கு இது புண்ணியமாக அமையும் என்பதால் அரிசியை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று தேவசம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.