சபரிமலை நடை திறப்பு: மண்டல காலம் நாளை அதிகாலை தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2025 08:11
சபரிமலை; மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை சரண கோஷங்கள்
முழங்க திறக்கப்பட்டது. நாளை அதிகாலை 3:00 மணிக்கு இந்த ஆண்டுக்கான மண்டல
காலம் தொடங்கியது.
கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள்
தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை சபரிமலையில் ஒரு மண்டல காலமாகும். இதற்காக
இன்று மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்த
போது பக்தர்கள் சரண கோஷம் எழுப்பினர். தொடர்ந்து கோயிலை வலம் வந்த மேல்
சாந்தி 18 படிகள் வழியாக வந்து ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்த்தார்.
பின்னர்
18 படிகளுக்கு கீழே இருமுடி கட்டுடன் நின்று கொண்டிருந்த புதிய மேல்
சாந்திகள் சபரிமலை பிரசாத் நம்பூதிரி, மாளிகைப்புறம் மனு நம்பூதிரியை
கைப்பிடித்து அழைத்து வந்தார். ஐயப்பன் சன்னதி முன்புறம் வந்ததும்
அவர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கப்பட்டது.
மாலை 6:30 மணிக்கு
ஐயப்பன் சன்னதி முன் நடந்த சடங்கில் சபரிமலை புதிய மேல் சாந்தி பிரசாத்
நம்பூதிரிக்கு, தந்திரி மகேஷ் மோகனரரு அபிஷேகம் நடத்தி சன்னதிக்குள்
அழைத்து சென்றார். இதுபோல மாளிகைப்புறம் கோயில் முன்புறம் நடந்த சடங்கில்
மனு நம்பூதிரிக்கு அபிஷேகம் நடத்தி கோயிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.
நேற்று வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 11:00மணிக்கு நடை
அடைக்கப்படும்.
நாளை அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி பிரசாத்
நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம்
தொடங்கியது. தொடர்ந்து தந்திரி மகேஷ் மோகன ரரு ஐயப்பன் சிலையில் அபிஷேகம்
நடத்திய பின்னர் நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்தார். பின்னர் கோயில்
முன்புறமுள்ள மண்டபத்தில் கணபதி ஹோமம் நடக்கிறது. டிச.,27 வரை எல்லா
நாட்களிலும் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3:30 முதல் 11:30 வரை
நெய்பிஷேகம் நடைபெறும். 3:30க்கு கணபதி ஹோமம், 7:30க்கு உஷ பூஜை,12:00-
க்கு களபாபிஷேகம், கலசாபிஷேகம், 12:-30க்கு உச்சபூஜை முடிந்து மதியம் 1:00
மணிக்கு அடைக்கப்படும். மீண்டும் மதியம் 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு
மாலை 6:30-க்கு தீபாராதனை, இரவு 7:00 மணிக்கு புஷ்பாபிஷேகம் 9:30 மணிக்கு
அத்தாழபூஜை நடைபெறும். 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
தினமும் ஆன்லைன் முன்பதிவில் 70 ஆயிரம் பக்தர்களும், ஸ்பாட் புக்கிங்கில் 20 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப் படுகின்றனர்.
தடை:
சபரிமலை விழாக்களை படம் எடுக்க கோயிலின் இடது புறம் செய்தியாளர்களுக்கு
அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்த பகுதியில் செய்தியாளர்கள் செல்ல
தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக சுமார் 20 மீட்டர் துாரத்தில் இடம்
ஒதுக்கப் பட்டுள்ளது. இதனால் செய்தியாளர்கள் சிரமப்பட்டனர்.