பதிவு செய்த நாள்
03
டிச
2013
10:12
திருவான்மியூர்: திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில், கார்த்திகை மாத திங்கட்கிழமையையொட்டி, 1008 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில், கார்த்திகை மாத திங்கட்கிழமையையொட்டி, 1008 சங்குகளில் சேகரிக்கப்பட்ட புனித நீர் மூலம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு, விக்னேஸ்வர அனுக்ஞையுடன் யாக சாலை பூஜை ஆரம்பிக்கப்பட்டது. 11:00 மணிக்கு மகா பூர்ணாஹுதியும், மகா தீபாராதனையும் நடந்தது. அதை தொடர்ந்து, கலச புறப்பாடு நடந்தது. பகல், 12:00 மணிக்கு, 1,008 சங்காபிஷேகம் துவங்கியது. இந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல், வேளச்சேரி தண்டீசுவரர் கோவிலிலும், சுவாமிக்கு, 1008 சங்காபிஷேகம் நடந்தது. நகரின் பல பகுதிகளிலும் உள்ள, சிவன் கோவில்களில் கடந்த இரண்டு வாரங்களாக திங்கட்கிழமைகளில், சங்காபிஷேகம் நடந்து வருகிறது. சில கோவில்களில், கார்த்திகை கடைசி திங்கட்கிழமையில் சங்காபிஷேகம் நடக்க உள்ளது.