சபரிமலை: "சபரிமலையில் 18ம் படிக்கு முன்புறம் உள்ள பெரிய நடைப்பந்தல், இரண்டரை கோடி ரூபாய் செலவில் நவீன படுத்தப்படுகிறது. அடுத்த சீசனுக்குள் இதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, தேவசம்போர்டு உறுப்பினர் சுபாஷ்வாசு கூறினார். அவர் கூறியதாவது: சபரிமலை சன்னிதானத்தின் முன்புறம் உள்ள பெரிய நடைப்பந்தல் சுமார் 50 ஆண்டு பழமையானது. இரும்பு பாலங்கள் மற்றும் சிமென்ட் ஷீட்டுகளால் கட்டப்பட்டுள்ளது. தற்போது, இதை நவீனப்படுத்த தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இதன்படி இது இரண்டு மாடி கட்டடமாக மாறுகிறது. 2வது மாடிக்கு சரங்குத்தியில் இருந்து பக்தர்கள் நேரடியாக வருவதற்கு பாலம் கட்டப்படும். முதலில், இரண்டாவது மாடிக்கு வரும் பக்தர்கள், பின்னர் முதல் மாடி வழியாக, கீழ்தளத்துக்கு வந்து கோயிலுக்கு செல்வர். இந்த புதிய கட்டடத்தில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும். இரண்டரை கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம் அடுத்த சீசனுக்கள் நிறைவேற்றப்படும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் சபரிமலை மற்றும் பம்பையில் அன்னதானம் 24 மணி நேர சேவையாக மாற்றப்பட்டுள்ளது. பம்பையில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக ஒரு அன்னதான மையம் தனியாக செயல்படுகிறது. சன்னிதானத்தில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் 3 கட்டடங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த தேவசம்போர்டின் மீதமுள்ள 11 கட்டடங்களும் அடுத்த சீசனுக்கு முன் புதுப்பிக்கப்படும். கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டு பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் எண்ணிக்கையை ஒப்பிடும் போது பத்து முதல் 30 சதவீதம் பேர் கூடுதலாக வந்துள்ளனர். இதற்கேற்ப வருமானமும் அதிகரித்துள்ளது, என்றார்.