பதிவு செய்த நாள்
04
டிச
2013
10:12
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலிலிருந்து ஆஸ்திரேலியா கடத்திச் சென்ற சோழர் காலத்து அர்த்தநாரீஸ்வரர் சிலை குறித்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி., அசோக் நடராஜன் விசாரணை நடத்தினார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் விபச்சித்து முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவிலில் கண்டராதித்த சோழன், ராஜராஜசோழன் ஆகியோரால் அர்த்தநாரீஸ்வரர் சிலை, ஐந்து கோபுரங்கள், ஐந்து பிரகாரங்கள், ஐந்து கொடி மரங்கள் அமைக்கப்பட்டன. அதில், ராஜராஜசோழன் காலத்தில் முதல் பிரகார சுவரை ஒட்டியவாறு அர்த்தநாரீஸ்வரர் சிலை நிறுவப்பட்டது. இந்தச் சிலையின் கை ஒன்று, 2002ம் ஆண்டு சேதமானதால் அதனை எடுத்துவிட்டு, அங்கு வேறு சிலை வைக்கப்பட்டது. அகற்றிய சிலையை, கோவில் நிர்வாகத்தினர் பாதுகாப்பின்றி போட்டு வைத்தனர். புது சிலை வைத்ததைத் தொடர்ந்து பழைய சிலையை யாரும் கண்டு கொள்ளாததால் அதனை மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். இந்நிலையில், சிலை கடத்திய வழக்கில் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட சுபாஷ் சந்திர கபூர் கொடுத்த வாக்குமூலத்தில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அர்த்தநாரீஸ்வரர் சிலை கடத்தப்பட்டது தெரிந்தது. இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன் கடந்த ஜூலை மாதம் கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாண்டித்துரை வழக்குப் பதிவு செய்தார். இவ்வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., அசோக் நடராஜன், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு நேற்று வந்து, புதிய அர்த்தநாரீஸ்வரர் சிலை வைத்துள்ள இடத்தை பார்வையிட்டார். செயல் அலுவலர் பாலசுப்ரமணியராஜன், கோவில் நிர்வாகிகளிடம் விசாணை செய்தார்.