பதிவு செய்த நாள்
04
டிச
2013
10:12
மார்த்தாண்டம்: டிசம்பர் மாதம் துவங்கியதை தொடர்ந்து, குமரி மாவட்ட கடைகளில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஸ்டார்கள், குடில் அமைக்கும் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் பாலஸ்தீன நாட்டின் ஜெருசலேமில் மாட்டுத்தொழுவத்தில் ஏசு கிறிஸ்து பிறந்ததையொட்டி டிசம்பர் 25ம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் கிறிஸ்துமஸ் விழாக்கள் துவங்கிய வண்ணம் உள்ளது. குமரி மாவட்டத்தை பொறுத்தவரை கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி சாதி, மத, இன, மொழி பாகுபாடின்றி அனைவராலும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் அனைத்து சர்ச்சுகளிலும் பாறை மற்றும் மலைப்பிரதேசங்களில் வளர்ந்து டிசம்பர் மாதத்தில் மட்டுமே பூக்கும் தருவைபுல்லை கொண்டு புல்குடில் அமைக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்படும் புல்குடிலில் ஏசு கிறிஸ்து பிறந்ததை நினைவு கூரும் வண்ணம் குழந்தை ஏசு மற்றும் கன்னிமரியாள், சூசையப்பர், ஆட்டிடையர்கள் உள்ளிட்ட சொரூபங்களை வைத்து வண்ண விளக்குகளாலும், பல வகையான ஒளிரும் ஸ்டார்களையும் அமைத்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சுகளில் மட்டுமன்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இளைஞர்கள், பல்வேறு கிளப்புகள், மன்றங்கள் உட்பட அமைப்புகள் சார்பில் தருவைப்புல்லால் கம்பீரமான பெரிய குடில்கள் அமைத்து விழாவை சிறப்பிக்கின்றனர். மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஸ்டார்கள் பெரும்பாலான வீடுகளிலும், நிறுவனங்களிலும் கட்டப்படுகிறது. கிறிஸ்துமஸ் கேக் மற்றும் பரிசு ஒருவருக்கொருவர் பரிமாறுதல், வாழ்த்து அட்டைகள் அனுப்புதல், ஷாப்பிங் உள்ளிட்டவை பண்டிகையின் முக்கிய அம்சங்களாகும். கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு அனைத்து சர்ச்சுகளிலும் சிறப்பு வழிபாடுகளும், பவனிகளும் நடக்கிறது. வீடுகள்தோறும் சென்று கிறிஸ்து பிறப்பை அறிவிக்கும் கிறிஸ்துமஸ் கேரல் நிகழ்ச்சியும் துவங்கியுள்ளது. இதில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர் சென்று குழந்தைகளுக்கு இனிப்புகளும், பரிசுகளும் வழங்குவது அனைத்து குழந்தைகளையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஆண்டும், கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் மாவட்டத்தின் முக்கிய கடைகளில் பலதரப்பட்ட ஸ்டார்கள், கண்ணை கவரும் வண்ண விளக்குகள், ரெடிமேட் புல்குடில்கள், குடில் செட்டுகள், பரிசு பொருட்கள், கிறிஸ்துமஸ் மரம், அலங்கார பொருட்கள், வாழ்த்து அட்டைகள் என பல்வேறு பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன.