சிதம்பரம் நடராஜர் ஆருத்ரா தரிசனம்: மதியம் 1 மணிக்குள் முடிக்க கோரிக்கை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05டிச 2013 10:12
சிதம்பரம்: பக்தர்கள் பாதிக்காத வகையில் நடராஜர் கோவில் மார்கழி ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி மதியம் 1:00 மணிக்குள் முடிக்க வேண்டும் என நந்தனார் ஆய்வு மையம் கோரிக்கை வைத்துள்ளது. நந்தனார் ஆய்வு மைய அமைப்பாளர் காவியச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை: சைவ தலங்களில் முதன்மையானதும் பஞ்ச பூத தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி ஆரூத்ரா, ஆனித் திருமஞ்சனம் தரிசனம், தேரோட்டம் ஆகியவை முக்கிய நிகழ்ச்சிகளாகும். இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் சார்பில் ஆரூத்ரா தரிசன விழாவிற்கு இரண்டு விதமான அழைப்பிதழ்கள் அச்சடித்து வெளியிட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. இதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி முறைப்படுத்த வேண்டும். நடராஜர் கோவில் ஆரூத்ரா தரிசனம் நேரம் பிற்பகல் 1 முதல் மாலை 4 மணிக்குள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள், பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பக்தர்கள் 5 மணி நேரம் காத்துக் கிடக்க வேண்டிய அவலநிலை ஆண்டுதோறும் நீடிக்கிறது. நடராஜர் தரிசனத்தைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் முதியோர் பாதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் பாதிக்காத வகையில் நடராஜர் தரிசனம் நிகழ்ச்சியை மதியம் 1 மணிக்குள் முடிக்க வேண்டும். இதற்கு இந்து அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.