கருமத்தம்பட்டி: பதுவம்பள்ளி கரியகாளியம்மன் கோவில் 300 ஆண்டுகள் பழமையானது. இங்கு கோபுரத்துக்கு வர்ணம் தீட்டுதல், பரிவார தெய்வங்கள் பிரதிஷ்டை உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன. கும்பாபிஷேக விழா, கடந்த 3ம்தேதி மாலை 5.00 மணிக்கு கணபதி வழிபாட்டுடன் துவங்கியது. தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்தன. 4ம்தேதி பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்திடல் மற்றும் கோபுர கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று காலை 5.00 மணி முதல் 6.00 மணிக்குள் ஆதி விநாயகர், அரச மர விநாயகர், பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 7.30 மணி முதல் 8.30 மணி வரை, பரிவார தெய்வங்கள் மற்றும் கரிய காளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. கவுமார மடாலய குமரகுருபர சுவாமிகள், பேரூர் மடாலய மருதாசல அடிகளார், பதுவம்பள்ளி ராமலிங்க அடிகளார் உள்ளிட்டோர் பங்கேற்று ஆசி வழங்கினர்.