புதுக்கோட்டை: புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவிலில் நேற்று(6ம் தேதி) நடந்த லட்சார்ச்சனை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியில் அருள்மிகு வேதநாயகி சமேத சாந்தநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு 5 ஆண்டுகளுக்கு பின் டிச 6; வேதநாயகி அம்மனுக்கு வேதமந்திரங்கள் முழங்க குங்குமத்தால் லட்சார்ச்சனை நடந்தது. அதிகாலை 5.30 மணிக்கு துவங்கிய லட்சார்ச்சனை இரவு 9.30 மணிவரை தொடர்ந்து நடந்தது. இதில், புதுக்கோட்டை நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குறிப்பாக சுமங்கலி பெண்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர். விழாவை முன்னிட்டு வேதநாயகி அம்மன் சர்வ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.