பதிவு செய்த நாள்
12
டிச
2013
11:12
மாமல்லபுரம்: மாமல்லபுரம் பூதத்தாழ்வார் அவதார மண்டபம், 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணிக்காக பிரிக்கப்பட்டது. மாமல்லபுரத்தில் தோன்றிய பூதத்தாழ்வார், இரண்டாம் திருவந்தாதி, நாலாயிர திவ்விய பிரபந்த பாடல்கள் இயற்றி, ஸ்தலசயனப் பெருமாளை போற்றி பாடியுள்ளார். அவருக்கு கோவிலில் தனி சன்னிதியும், நந்தவன பூங்காவில் தீர்த்தகுளத்துடன் அவதார மண்டபமும் உள்ளன. இதில் அவதார மண்டப வளாகம், நீண்டகாலமாக பராமரிப்பின்றி சீரழிந்தது. 14ம் நூற்றாண்டு விஜயநகர ஆட்சியில் கட்டிய இந்த மண்டபம், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்து சீரழிந்து வருகிறது. மேல்தளம், தரைத்தளம், அடித்தளம், துாண்கள், பக்கவாட்டு கற்கள் ஆகியவை முற்றிலும் சிதலமடைந்துவிட்டன. இதனால் பக்தர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் இந்த மண்டபத்தை, 14 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்க கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது. இதற்காக அரசு சார்பில், 8 லட்சம் ரூபாயும், கோவில் நிர்வாகம் சார்பில், 6 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. புனரமைப்பு பணிகளுக்காக, கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி பூமிபூஜை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்போது புனரமைப்பு பணிக்காக மண்டபம் பிரிக்கப்பட்டுள்ளது.