பதிவு செய்த நாள்
12
டிச
2013
11:12
திருப்புத்தூர்: சபரிமலை செல்ல "ஆன்-லைன் ரிசர்வ் செய்ய முடியாததால், பயண தேதிகளை நிர்ணயிக்க முடியாமல், ஐயப்ப பக்தர்கள் தடுமாற்றத்தில் உள்ளனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில், ஐயப்பனுக்கு மாலையிட்டு, 45நாட்கள் விரதம் இருப்பது வழக்கம். விரதம் முடிப்பவர்கள், ஜனவரி முதல் வாரம் மற்றும் மகரஜோதி காலங்களில் அதிகளவில் செல்வர். அதற்கேற்ப தங்கள் பயண நாட்களை முடிவு செய்து, ஆன்மிக சுற்றுலா பயணம் செல்கின்றனர். தற்போது, பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு வரிசையாக செல்ல, "ஆன்- லைன் மூலம் பதிவு செய்யும் வசதியை, கேரளா அறிமுகம் செய்தது. இதற்காக, "” www.sabarimalaq.com வெப்சைட் ஏற்படுத்தியுள்ளனர். இந்த வசதியால், தரிசனத்திற்கு பதிவு செய்த பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் குறித்த நேரத்தில் தரிசனம் செய்ய முடிகிறது. பயண தேதியை நிர்ணயித்து செல்ல முடியும் என்பதால், பக்தர்கள் அதிகம் விரும்புகின்றனர். ஆனால்,இந்த வெப்சைட்டில், முன்பதிவு மறுக்கப்பட்டு, பக்தர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. நேற்றைய நிலவரப்படி, "ஆன்-லைன் -ல் டிசம்பர், ஜனவரி மாதங்களுக்கு டிச.,24 மற்றும் ஜன.16, 17, 18 ஆகிய நான்கு நாட்களுக்கு மட்டுமே, "ஸ்லாட்கள் திறந்துள்ளது. மற்ற நாட்களுக்கான "ஸ்லாட்கள் திறக்கப்படவில்லை. சில நாட்கள் மட்டுமே, ஒதுக்கீடு வழங்குவதால், பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் பயண தேதியை நிர்ணயிக்க முடியாமல் பக்தர்கள் தடுமாற்றத்தில் உள்ளனர். பணியாற்றும் நிறுவனங்களில், விடுப்பு எடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.