சபரிமலை சத்திரம் - புல்மேடு வனப்பாதை : முதல் நாள் 788 பக்தர்கள் சென்றனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2025 04:11
மூணாறு; சபரிமலை மண்டல கால மகரவிளக்கு சீசன் துவங்கியதால், சத்திரம், புல்மேடு வனப்பாதையில் முதல் நாள் 788 பக்தர்கள் சன்னிதானம் சென்றனர்.
இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு அருகே சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலை செல்லும் பாரம்பரிய வனப்பாதையை ஐய்யப்ப பக்தர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். கடந்தாண்டு மண்டல கால அளவில்132 500 பக்தர்கள் புல்மேடு வழியாக சன்னிதானம் சென்றனர். இந்நிலையில் சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் துவங்கியதால் சபரிமலை செல்ல நவ.16ல் மதியம் முதல் சத்திரத்திற்கு பக்தர்கள் வர துவங்கினர். அங்கு இரவில் தங்கிய பக்தர்களுக்கு முதல்நாளான நேற்று காலை 6:30 மணிக்கு போலீசார் டோக்கன் வழங்கினர். அங்கு தேவசம் போர்டு சார்பில் முன்பதிவு செய்வதற்கு ஏற்பாடுகள்க நடந்தன. அதன் பிறகு வனத்துறை முகாம் அலுவலகத்தில் காலை 7:30 மணிக்கு பாதுகாப்பு சோதனைகள் நடந்தன. பின்னர் ஆயுதம் ஏந்திய வனக்காவலர்கள் வனப்பாதையில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்தனர். வனவிலங்குகள் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு பக்தர்களை வனப்பாதையில் செல்ல அனுமதித்தனர். தமிழகம் ஈரோட்டைச் சேர்ந்த பக்தர் ஜீவானந்த் முதன்முதலாக வனப்பாதையில் சென்றார். அவரை பக்தர்கள் பின் தொடர்ந்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய வனக்காவலர்கள் சீதக்குளம் வரை சென்றனர். சபரிமலை சீசன் துவங்கிய முதல் நாளான நேற்று சத்திரம், புல்மேடு வனப்பாதை வழியாக 788 பக்தர்கள் சென்றனர். கடந்தாண்டு முதல் நாள் 412 பக்தர்கள் சென்றனர். சத்திரம், புல்மேடு வழியாக தினமும் காலை 7:00 முதல் மதியம் 1:00 மணி வரை பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.