சன்னிதானத்தில் ஆன்லைன் கியூ: புதிய முறையில் மாற்றி அமைப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2013 06:12
சபரிமலை: சபரிமலையில் ஆன்லைன் கியூவிற்காக அமைக்கப்பட்டிருந்த ஏற்பாடுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பதிவு செய்தவர்களும், செய்யாதவர்களும் நடைப்பந்தலில் கியூவில் நிற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரள போலீசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆன்லைன் முன்பதிவில் தினமும் 20 முதல் 28 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்கின்றனர். இவர்கள் மரக்கூட்டம் என்ற இடத்தில் வரும் போது சரங்குத்தி வழியாக போக வேண்டியதில்லை. இவர்கள் சந்திராங்கதன் ரோடு வழியாக சன்னிதானத்துக்கு அனுப்பபடுகின்றனர். இவ்வாறு கியூவில் இல்லாமல் வரும் ஆன்லைன் பதிவு தாரர்கள் நடைப்பந்தல் அருகே உள்ள பிளைஓவர் வழியாக, விருந்தினர்மாளிகை செல்லும் பகுதிக்கு வருகின்றனர். பின்னர் நடைப்பந்தலில் கியூவில் நின்று மெட்டல் டிடெக்டர் வழியாக தரிசனத்துக்கு அனுப்பட்டனர். ஆனால் பிளைஓவரில் பக்தர்கள் நிற்பதற்கு வசதி இல்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பக்தர்கள் சலசலப்பில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். இந்நிலையில் நடைப்பந்தலில் உள்ள ஐந்து கம்பி வேலிகளில் இரண்டு வேலிகளில் ஆன்லைன் பதிவுதாரர்களும், மீதமுள்ள கம்பிவேலிகளில் பதிவு செய்யாத பக்தர்களும் நிற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் கூட்டம் அதிகமாகும் போது பதிவு செய்யாதவர்கள் கியூ நீண்ட தூரத்துக்கு நீளும் நிலை ஏற்பட்டுள்ளது.