திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று கைசிக ஏகாதசி விழா நடக்கிறது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கார்த்திகை மாதம் ஏகாதசி அன்று நடக்கும் கைசிக ஏகாதசி விழா முக்கியமானது. இந்த ஆண்டுக்கான விழா இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் கோவில், இரண்டாம் பிரகாரம் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருள்கிறார். இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நள்ளிரவுக்கு பின் கைசிக புராணம் எனப்படும் பக்தர் வரலாற்றை நம்பெருமாள் முன் பட்டர் வாசிப்பார். இந்த புராணத்தை கேட்பவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மறுநாள் அதிகாலை கற்பூர படியேற்ற ஸேவை நடக்கும். கைசிக ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி கோவிலிலிருந்த புதிய பட்டு வஸ்திரங்கள், மாலை, பச்சை கற்பூரம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் (வேங்கடமுடையான் மரியாதை) ஸ்ரீரங்கம் கொண்டுவரப்பட்டு, ரங்கநாதர், நம்பெருமாள், தாயார், உடையவருக்கும் காணிக்கையாக சமர்ப்பிக்கப்படும். அதன்படி, திருப்பதியில் இருந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இன்று மங்கலப்பொருட்கள் வருகின்றன. அவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பப்பிராஜூ தலைமையிலான தேவஸ்தான அலுவலர்கள், ஸ்ரீரங்கம் வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து, ரங்கநாதர் கோவிலில் ஒப்படைக்கின்றனர்.