பதிவு செய்த நாள்
13
டிச
2013
11:12
ஆத்தூர்: ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், பஞ்சலோக நூதன விக்ரஹம், சோமாகஸ்கந்தர், பிரதோஷ நாயர் மற்றும் கொடி மரத்துக்கு நடந்த, கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். ஆத்தூர் வசிஷ்ட நதிக்கரை, கோட்டை பகுதியில், காயநிர்மலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, 31 அடி உயரத்தில், 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பஞ்சலோக கொடி மரம், பஞ்சலோக நூதன விக்ரஹம், சோமாகஸ்கந்தர், பிரதோஷ நாயகர் சிலை வடிமைக்கப்பட்டது. நேற்று முன்தினம், காலை, 9 மணியளவில், சிவானுக்ஞை, யஜமான சங்கல்பம், விக்னேஸ்வரர் பூஜை, புண்யாஹவாசனம், மகா கணபதி யாகத்துடன், வேள்வி யாகம் துவங்கப்பட்டது. தொடர்ந்து, மாலை, 5 மணியளவில், வாஸ்து சாந்தி ம்ஞருத்சங்கிரஹணம், அங்குரம் ரக்ஷாபந்தனம், கும்பாலங்காரம், கலாகர்ஷணம், முதல் கால யாக சாலை பிரவேசம், ருத்ரபாராயணம், ஷண்ணவதி ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாஹுதி, மகா தீபாரதனை நடந்தது. நேற்று அதிகாலை, 5.45 மணியளவில், இரண்டாம் கால யாக பூஜை, பிச்பசுத்தி தத்துவார்ச்சனை, நாடி சந்தானம், ஸ்பர்சாகுதி, பதமந்த்ர ஹோமம், ஷண்ணவதி ஹோமம் நடந்தது. காலை, 8 மணியளவில், துவஜஸ்தம்பத்துக்கு (கொடி மரம்), புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 8.30 மணியளவில், சோமாஸ்கந்தர், பிரதோஷ நாயகருக்கு, வேங்கடசுப்ரமணியர், சிவக்குமார் சிவாச்சாரியார்கள், மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். அதையொட்டி, மூலவர் காயநிர்மலேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் ஸ்வாமிகள், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில், அருள்பாலித்தனர்.விழாவில், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.