பதிவு செய்த நாள்
14
டிச
2013
11:12
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், கடந்த இரண்டு மாதங்களாக பக்தர்கள் செலுத்திய காணிக்கை, நேற்று எண்ணப்பட்டது; ரூ.ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 825 காணிக்கையாக பெறப்பட்டது. உடுமலை, திருமூர்த்தி மலையில் பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று சுவாமிகள் எழுந்தருளியுள்ளனர். சுற்றுலா ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலுக்கு, உடுமலை சுற்றுப்பகுதி மக்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும், வந்து செல்கின்றனர். கடந்த அக்., 26 முதல் நேற்று வரை, இக்கோவிலில், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இந்து அறநிலையத்துறை திருப்பூர் உதவிக்கமிஷனர் ஆனந்த் முன்னிலையில், உடுமலை சரக ஆய்வர் சண்முகசுந்தரம், கோவில் செயல் அலுவலர் அழகேசன் மேற்பார்வையில், உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர், தேவனூர் புதூர் பாலமுருகன் காவடி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், ரூ. ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 825ம், 30.5 கிராம் தங்கமும், 109.2 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பெறப்பட்டது.