ஈரோடு: ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் நடந்த கைசிக ஏகாதசி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஈரோடு கோட்டை பெருமாள் என்று அழைக்கப்படும் கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், நேற்று முன்தினம் கைசிக ஏகாதசி விழா கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் ஏகாதசி கைசிக ஏகாதசியாக, வைணவ பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சுவாமிக்கு, 365 வஸ்திரங்கள் சமர்பிக்கப்படும். ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்தூரி அரங்கநாதருக்கு அபிஷேகம், கடந்த, 13ம் தேதி காலை நடந்தது. மாலை, ஏழு மணியளவில் கைசிக ஏகாதசி உற்சவம் நடந்தது. இதையொட்டி வேத மந்திரங்கள் முழங்க, 365 வஸ்திரங்கள் சுவாமிக்கு சமர்பிக்கப்பட்டன. கைசிக மகாத்மிய பாராயணம் பிரபந்த கோஷ்டியினரால் வாசிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை எம்பெருமானார் நித்ய கைங்கர்ய டிரஸ்ட் செய்திருந்தது.