பதிவு செய்த நாள்
19
டிச
2013
10:12
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில், பிறவி மருந்தீஸர் கோவிலில் திருவாதிரையையொட்டி நடராஜர் ஸ்வாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில், வில்வாரணீய சேத்திரம் என, அழைக்கப்படும் பிறவி மருந்தீஸர் கோவிலில் கடந்த, 10 தினங்களாக நடராஜர் மண்டபத்தில் மாணிக்கவாசகர் எழுந்தருளி பாடல்கள் பாடும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இவ்விழாவில் இசை பாடல்களுடன் சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் இரவு முதல், நடராஜர் ஸ்வாமிக்கு தொடர்ந்து அபிஷேகமும், நேற்று அதிகாலை, 6 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. பின்னர், நடராஜர் ஸ்வாமி நான்கு வீதிகளிலும் உலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, கோவில் வாசலில் சிவகாமி அம்மையார், மாணிக்கவாசகர் எழுந்தருளி சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர்கள் செய்திருந்தனர்.