களக்காடு: களக்காடு அருகேயுள்ள மேலகருவேலன்குளம் சௌந்திரபாண்டீஸ்வரர் கோயிலில் நேற்று ஆரூத்ரா தரிசனம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.களக்காடு அருகேயுள்ள மேலக்கருவேலன்குளம் கோயில் திருவாதிரை திருவிழா நடக்கும் ஐம்பெரும் புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறவது வழக்கம். இக்கோயிலுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேரளாவில் இருந்து பக்தர்கள் வருவது அதிகரித்து வருகிறது. புகழ் பெற்ற இக்கோவில் திருவாதிரை திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மாலை வேளைகளில் சிறப்பு பூஜை மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது. 9ம் திருவிழாவான நேற்று முன்தினம் மாலை தேரோட்டம் நடந்தது. தேரோட்ட திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். 10ம் திருநாளான நேற்று அதிகாலை ஆரூத்ரா தரிசனம் நடந்தது. இதையொட்டி நடராஜருக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. இந்நிகழ்ச்சியில் களக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் பொதுமக்கள் செய்திருந்தனர்.