சபரிமலை: யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து நிலக்கல்- பம்பை ரோட்டில், கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் குறைந்த வேகத்தில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெரியாறு வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதியில் சபரிமலை உள்ளது. கஸ்தூரி ரங்கன் கமிட்டி அறிக்கையின் படி, பம்பைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில் சன்னிதானம் அருகே பாண்டித்தாவளம், உரக்குழி, நிலக்கல் - பம்பை இடையே பிலாப்பள்ளி, சாலக்கயம், செழிக்குழி ஆகிய இடங்களில் யானைகள் நடமாடுகின்றன. எனவே நிலக்கல் - பம்பை இடையே வாகனங்களின் வேகத்தை குறைக்க வேண்டும் என்று வனத்துறை சார்பில் மோட்டார் வாகனத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. யானைகள் நடமாடும் பகுதியில் வேகத்தடைக்கு பதிலாக வேகத்தை குறைக்கவும், அதே நேரத்தில் ஒலி எழுப்புவதற்காகவும் ரம்ப்ளிங் ஸ்டிச்சிங் (உயரம் குறைந்த அடுக்கு வேகத்தடை) அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பம்பை மற்றும் பிலாப்பள்ளியில் கால்நடை டாக்டர் சசீந்திரன் தலைமையில் யானை கண்காணிப்பு படைகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. யானைகள் வரும் பகுதியில், புலி மற்றும் பிற விலங்குகளின் ஒலிகளை பதிவு செய்து ஒலிபரப்பவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.