பதிவு செய்த நாள்
19
டிச
2013
11:12
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில், நேற்று ஆருத்ரா தரிசன விழா நடந்தது. * ஈரோடு: ஈரோடு, கோட்டை ஈஸ்வரன் கோவிலில், 68ம் ஆண்டு மார்கழி பெருவிழா, திருவெம்பாவை விழா டிச., 9ம் தேதி துவங்கி, இன்று வரை நடக்கிறது. இதை முன்னிட்டு, நேற்று ஈஸ்வரன் பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசனத்தில் காட்சியளித்தார். நேற்று அதிகாலை, நான்கு மணிக்கு ஸ்ரீநடராஜருக்கு அபிஷேகம், ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதில் நடராஜர், பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து இன்று, காலை மஞ்சள் நீர் விழா நடக்கிறது.
* பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை, 5 மணிக்கு, சிவகாமி உடனமர் ஸ்ரீநடராஜர் பெருமானுக்கு பல்வேறு திரவிய அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, உபயதாரர்கள் செய்தனர். பூஜைகளை, கிரி ஐயர், மணிகண்ட ஐயர், சங்கர் ஆகியோர் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பவானீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், ஸ்ரீ சிவகாமி மற்றும் நடராஜர் திருக்கல்யாணம் நடந்தது. இதனையடுத்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
நேற்று காலை மஹா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. இதனையடுத்து ஸ்ரீசிவகாமி மற்றும் நடராஜர் வீதி உலா வந்தபோது, பக்தர்கள் கும்மியடித்து, கோலாட்டத்துடன் வணங்கினர்.
* கோபிசெட்டிபாளையம்: கோபி அனுமந்தராயன் கோவில் வீதி தெப்ப குளம் அருகே, அரசமரத்து விநாயகர் கோவில் வளாகத்தில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது. அக்ரஹார வீதியில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவிலில், நேற்று காலை நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, பூஜை நடந்தது. சிறப்பு அலங்கராத்தில் சுவாமி, அம்பாள், கடைவீதியில் உள்ள சாரதா மாரியம்மன் மற்றும் மாதேஸ்வரன், அம்பாள் ஆகிய ஐந்து ஸ்வாமிகள் சப்பரத்தில் அமர்த்தப்பட்டனர்.
தெப்பகுளம் அருகே விநாயகர் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு அரச மரத்தை, 11 முறை வலம் வந்தனர்.
திருவாதிரை முன்னிட்டு தாலி பாக்கியம் வேண்டி, தாலி சரடு, மஞ்சள் பிள்ளையார் பிடித்து, திருவாதிரை கழி செய்து, பூசணி உள்ளிட்ட மூன்று வகையான காய்களை சமைத்து, ஸ்வாமிக்கு படையலிட்டு வழிபட்டனர்.
மாங்கல்ய விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர். மாங்கல்ய நோன்பிருந்த, பெண்களுக்கு தாலி சரடு வழங்கப்பட்டது.