பதிவு செய்த நாள்
20
டிச
2013
11:12
கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், யானைகள் புத்துணர்வு முகாம் நேற்று துவங்கியது. "தமிழகத்தில், கோவில்கள், மடங்கள் மற்றும் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு, புத்துணர்வு அளிக்க, 48 நாள் சிறப்பு முகாம் நடத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, கோவில் யானைகளுக்கு புத்துணர்வு அளிக்க, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டியில், பவானி ஆற்றின் ஓரத்தில், 12 ஏக்கர் நிலப்பரப்பில், முகாம் அமைக்கப்பட்டது. வனத்துறை யானைகளுக்காக, அருகேயுள்ள விளாமரத்தூர் வனப்பகுதியில் முகாம் அமைக்கப்பட்டது. தேக்கம்பட்டியில் அமைக்கப்பட்ட, முகாம் துவக்க விழா, நேற்று நடந்தது. யானைகள் அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் செய்து, வரிசையாக நிறுத்தப்பட்டன. காலை, 9:00 மணிக்கு, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன், வனத்துறை அமைச்சர் ஆனந்தன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்து, யானைகளுக்கு, கரும்பு, பழங்களை கொடுத்தனர். பின், விளாமரத்தூரில் அமைக்கப்பட்டுள்ள, வனத்துறை யானைகள் முகாமிலும் துவக்க விழா நடந்தது. அமைச்சர் செந்தூர் பாண்டியன் கூறுகையில்,"" முதல்வர் ஜெயலலிதா அறிவித்த, யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் இன்று துவங்கி, பிப்., 4ம் தேதி வரை நடைபெறும். கோவில் மற்றும் வனத்துறை யானைகளுக்கு புத்துணர்வு பயிற்சி, வாக்கிங் மற்றும் மூலிகை உணவு வழங்கப்படும். யானைகளுக்கு சிகிச்சை அளிக்க இரவு பகலாக கால்நடை மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருப்பர்,என்றார்.
டாப்சிலிப் முகாம் : கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள உலாந்தி வனச்சரகத்திற்குட் பட்ட டாப்சிலிப் வனப்பகுதி சுற்றுலாத்தலமாக உள்ளது. மேட்டுப்பாளையம் சென்றது போக, மீதம் உள்ள, 14 யானைகளுக்கான சிறப்பு நல புத்துணர்வு முகாம், கோழி கமுத்தி, சின்னார், வரகளியார் முகாம்களில் நேற்று துவங்கியது. முதுமலை : மேட்டுப்பாளையம் யானைகள் முகாமில், முதுமலையை சேர்ந்த, எட்டு வளர்ப்பு யானைகள் பங்கேற்றுள்ளன. முதுமலையில் மீதமுள்ள, 19 வளர்ப்பு யானைகளில், எட்டு யானைகளுக்கு அபயாரண்யம் முகாம், எட்டு யானைகளுக்கு பாம்பேக்ஸ் முகாமில், நலவாழ்வு முகாம் நேற்று பூஜையுடன் துவங்கியது.
வழங்கப்படும் உணவு : புத்துணர்வு முகாமில் பங்கேற்றுள்ள, யானைகளுக்கு தினமும் கூந்தல்பனை, தென்னை மட்டை, புல், கரும்புசோகை, கரும்பு, பலா இலை, சோளத்தட்டு போன்ற, பசுந்தீவனங்களும், அரிசி, பச்சைப்பயிறு, கொள்ளு, உப்பு, மஞ்சள் போன்றவையும் வழங்கப்படும். அத்துடன், அஷ்டசூரணம், சவணப்ராஸ், பயோ பூஸ்ட் மாத்திரை, லிவ் -52 மாத்திரை, புரோட்டின் சப்ளிமென்ட், மல்டி வைட்டமின் மாத்திரைகள், மினரல் மிக்சர் ஆகிய ஆயுர்வேத மருந்துகளும் வழங்கப்படும்.
மூன்று குட்டி யானைகள் : மேட்டுப்பாளையும் அருகே நடைபெறும் புத்துணர்வு முகாம்களில், கோவில் யானைகள், 31ம், வனத்துறை யானைகள், 18ம் பங்கேற்றுள்ளன. வனத்துறை யானைகள் முகாமிற்கு வந்துள்ள, 18 யானைகளில், டாப்சிலிப்பில் இருந்து வந்த அபிநயா,7, தமிழன்,7, வண்டலூரில் இருந்து வந்த சரவணன்,7, ஆகிய மூன்றும் குட்டி யானைகளாகும்.