பதிவு செய்த நாள்
21
டிச
2013
10:12
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த புத்திரகவுண்டன்பாளையம் புனித, 13ம் சிங்கராயர் கிறிஸ்துவ ஆலயத்தில், 65 அடி உயரத்தில், மிக உயரான ஏசுநாதர், "பைபர் சிலை தத்ரூபமாக நிறுவப்பட்டுள்ளது. டிச 21, அதன் திறப்பு விழா, வெகுவிமரிசையாக நடக்கிறது. வாழப்பாடி அடுத்த புத்திரகவுண்டன்பாளையத்தில், 100 ஆண்டுக்கு முன், கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் சார்பில், புனித, 13ம் சிங்கராயர் தேவாலாயம் அமைக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன், சேலம்உளுந்தூர்பேட்டை நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக, அந்த ஆலயம் அப்புறப்படுத்தப்பட்டது. அதனையடுத்து, அந்த இடத்தில், 50 லட்சம் ரூபாய் செலவில், புனித சிங்கராயர் தேவாலயம் மற்றும் செபஸ்தியார் திருத்தலம் அமைக்கும் பணி, சேலம் மறை மாவட்ட பேராயர் சிங்கராயன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. திருத்தலம் முகப்பில், வாழப்பாடி ரியல் எஸ்டேட் அதிபர் லாசர் குடும்பத்தார் சார்பில், 20 லட்சம் ரூபாய் செலவில், 65 அடி உயரத்தில், மிக உயரமான ஏசு கிறிஸ்து பைபர் சிலை, தத்ரூபமாக நிறுவப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழா, டிச 21 காலை, 7 மணியளவில் நடக்கிறது. சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன், தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ்பயஸ், உதகை மறை மாவட்ட முதன்மை குரு அந்தோனிசாமி அடிகளார், தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி, மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு ஆகியோர் கலந்து கொள்கின்றனர். கோயில் மற்றும் சிலை திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை, வாழப்பாடி கத்தோலிக்க கிறிஸ்துவ பங்கு தந்தை குருசடிசகாயராஜ், சிலை அமைப்புக்குழு தலைவர் லாசர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.