பதிவு செய்த நாள்
23
டிச
2013
11:12
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், அருள்நெறி பெருவிழா நடப்பதையொட்டி, பூச்செரிதல் நிகழ்ச்சி, கோலாகலமாக நடந்தது. திருச்செங்கோடு அருள் நெறி, 63 நாயன்மார்கள் வழிபாட்டுக் குழு சார்பில், முதலாம் ஆண்டு அருள்நெறிப் பெருவிழா நடந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன், நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தர், திருச்செங்கோடு வந்துள்ளார். அவர், குளிர், சுரத்தை போக்கும், திருநீலகண்ட பதிகம் இங்கு பாடியதாக கூறப்படுகிறது. அந்த, வரலாற்று தினத்தை நினைவு கூறும் வகையில், இந்த பெருவிழா நடத்தப்படுவதாக, அருள்நெறி குழுவினர் தெரிவித்தனர். திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலில், கணபதி ஹோமத்துடன், விழா துவங்கியது. "திருஞானசம்பந்தர் பூக்களை கொண்டு, திருநீலகண்டரை வணங்கி பதிகம் பாடியதை நினைவு கூறும் வகையில் பூச்செரிதல் நிகழ்ச்சி நடந்தது. ஐந்துரோடு மாரியம்மன் கோவில் பகுதியில், ஏராளமான பெண்கள், அவரவர் தட்டுகளில் பூக்களை எடுத்துக் கொண்டு, நான்கு ரத வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர். கைலாயநாதர்க்கு சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனையுடன் பூச்செரிதல் வழிபாடு நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது.