பதிவு செய்த நாள்
25
டிச
2013
11:12
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, சிவன், விஷ்ணு, விநாயகர் உள்ளிட்ட, 15 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே, ரெட்டியாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், வெள்ளையன். இவர்,நேற்றுமுன்தினம், அப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.அப்போது,வயல் பகுதியில், அம்மன் சிலையின் ஒருபகுதி தெரிந்ததைப் பார்த்த வெள்ளையன், மணலை அப்புறப்படுத்திவிட்டு, சிலையை வெளியே எடுத்துள்ளார். தொடர்ந்து, அப்பகுதில், மண்ணை தோண்டிய போது, சிவன், விஷ்ணு, விநாயகர், கருடாழ்வார், வராகமூர்த்தி, அகல் விளக்கேந்திய பெண் என, 15 சுவாமி சிலைகள் புதையுண்டு கிடந்தது தெரியவந்தது. அவற்றை வெளியே எடுத்த வெள்ளையன், அப்பகுதி, வி.ஏ.ஓ.,விடம் ஒப்படைத்தார். ஒரு அடி முதல், மூன்று அடி உயரம் உள்ள, வெண்கலத்தால் ஆன, இச்சிலைகளை, யாரேனும், கோவில்களில் கொள்ளையடித்த பின், மறைப்பதற்காக, மண்ணுக்குள் புதைத்திருக்கலாம் என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.போலீசார் விசாரிக்கின்றனர்.