பதிவு செய்த நாள்
25
டிச
2013
11:12
சென்னை: ""பாண்டிய மன்னர், மாறவர்மன் சுந்தரபாண்டியன், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு, பொன்னையும், பொருளையும், அள்ளிக் கொடுத்தார்; பொன்னாலான, கூரை வேய்ந்தார். அதனாலேயே, இந்தியாவில் படையெடுப்பு நடத்திய, கில்ஜி வம்ச மன்னர்களில் ஒருவரான, அலாவுதீன் கில்ஜியின் தளபதி, மாலிக்கபூர், ஸ்ரீரங்கம் கோவில் மீது படையெடுத்து, நிர்மூலமாக்கியதாக, வரலாறு கூறுகிறது, என, பேராசிரியர், சித்ரா மாதவன் பேசினார். தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில், "பேச்சுக் கச்சேரி என்ற பெயரில், ஸ்ரீரங்கம் கோவில் குறித்த, சொற்பொழிவு நடந்து வருகிறது. இதில், சித்ரா மாதவன் பேசியதாவது: "ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எப்போது உருவானது என, உறுதியாக சொல்ல முடியாது. அகநானூறில், ஸ்ரீரங்கத்தில், கோவில் இருந்ததற்கான குறிப்புகள் இருக்கின்றன. அதே போல், சிலப்பதிகாரத்திலும், அதற்கான குறிப்புகள் உள்ளன. இருந்தாலும், கோவில் உருவான ஆண்டை, உறுதியாக சொல்ல முடியாது. அவ்வளவு பழமையானது. நம் நாட்டில் உள்ள, அனைத்து வைணவ திருத்தலங்களிலும், ரங்கநாதர் கோவிலே, முதன்மையானது. ஏனெனில், திருப்பதியில் கூட, 11 ஆழ்வார்கள் மட்டுமே பாடினர். ஆனால், ரங்கநாதர் கோவில், மொத்தமுள்ள, 12 ஆழ்வார்களும் பாடிய, சிறப்பு பெற்றது. பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு மன்னர்கள், இப்புகழ்பெற்ற கோவிலை கட்டி, திருப்பணி செய்துள்ளனர். சோழ மன்னர்கள் திருப்பணி மேற்கொண்டதற்கான, கல்வெட்டுகள் உள்ளன. பாண்டிய மன்னர், மாறவர்மன் சுந்தரபாண்டியன், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு, பொன்னையும், பொருளையும், அள்ளிக்கொடுத்தார்; பொன்னாலான, கூரை வேய்ந்தார். அதை அறிந்து 13ம் நூற்றாண்டில், மாலிக்கபூர் படையெடுத்து, அக்கோவில் செல்வத்தை நிர்மூலமாக்கினார் என, வரலாறு கூறுகிறது.
அப்போது, உற்சவர் அழகிய மணவாளன் சிலைக்கு, சேதாரம் ஏற்படக் கூடாது என, பல்வேறு இடங்களுக்கு கோவில் பட்டர்கள் கொண்டு சென்றனர். கொச்சி, கோழிக்கோடு, திருப்பதி போன்ற இடங்களுக்கு அதைக் கொண்டு சென்று பாதுகாத்தனர். திருப்பதியில் மட்டும், 40 ஆண்டுகள், உற்சவர் சிலையை வைத்திருந்தனர். செஞ்சியை ஆண்ட விஜய நகர மன்னர்கள், திருப்பதியில் இருந்து, சிலையை செஞ்சிக்கு கொண்டு வந்தனர். பின், கோவிலை மீள் உருவாக்கம் செய்த பின்னர், மீண்டும் ஸ்ரீரங்கத்துக்கு கொண்டு வந்தது வரலாறு. அக்காலத்தில், ஏழு பிரகாரங்கள் கொண்டதாக, அமைந்த ரங்கநாதர் கோவில் இன்றும் பெருமையுடன் திகழ்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.