பதிவு செய்த நாள்
25
டிச
2013
11:12
காளஹஸ்தி: காளஹஸ்தி சிவன் கோவிலில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து, அறநிலையத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையை அடுத்து, கோவில் நிர்வாகி, இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது, கோவில் நிர்வாக அதிகாரியாக உள்ள, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, பணியில் சேர்ந்த நாள் முதல், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அறநிலையத்துறை அதிகாரிகள், 20 பேர் கொண்ட குழுவினர், நேற்று முன்தினம் நடத்திய திடீர் சோதனையில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காளஹஸ்தி சிவன் கோவிலில், ராகு கேது பூஜைக்கு பயன்படுத்தப்படும், வெள்ளி நாகங்களை தயார் செய்வதிலும், வெளி சந்தையில் வெள்ளி வாங்குவதிலும், பல கோடி ரூபாயில் முறைகேடு நடந்து தெரியவந்தது. மேலும், மாநில அறநிலைய துறை ஆணையாளர் முக்தீஸ்வர ராவ் நடத்திய விசாரணையில், மேல் அதிகாரிகளின் அனுமதியின்றி, சிறப்பு உற்சவங்கள் செய்து, அதிக பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநில அறநிலைய துறை எடுத்த நடவடிக்கையில், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை, மீண்டும் அரசு வருவாய்த் துறைக்கு இடமாற்றம் செய்தனர். தற்போது, காளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாக அதிகாரியாக, கம்பம் மாவட்டத்தில் உள்ள, திருப்பதி அம்மன் கோவில் நிர்வாக அதிகாரி, விஜயகுமார் கூடுதல் பொறுப்பேற்றார்.