பதிவு செய்த நாள்
27
டிச
2013
12:12
திண்டுக்கல்: பழநி கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டு, கோசாலையில் பராமரிக்கப்பட்டு வரும் மாடுகள், மகளிர் சுயஉதவி குழுவினருக்கு இலவசமாக வழங்கப்பட்டது. ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையத்தில், கோசாலை மாடுகளை மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வழங்கும் விழா நடந்தது. இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். கலெக்டர் வெங்கடாசலம் கூறியதாவது: பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு, பக்தர்கள் தரும் மாடுகள், கள்ளிமந்தைய கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மாடுகளை தொடர்ந்து பராமரிப்பதற்காக, மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வழங்கப்படுகின்றன. நத்தம், தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் பகுதிகளை சேர்ந்த 186 குழுக்களுக்கு, 186 மாடுகள் வழங்கப்படுகின்றன. கோசாலையில் விடப்படும் மாடுகள், சுழற்சி முறையில், அனைத்து ஊராட்சிகளை சேர்ந்த குழுக்களுக்கும் வழங்கப்படும். பசுந்தீவனம் அதிகம் கிடைக்கும் பகுதிகளுக்கு பசுக்களும், ஏனைய பகுதிகளுக்கு காளைகளும் வழங்கப்படும். மாடுகள் நன்றாக பராமரிக்கப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்வர், என்றார்.