பதிவு செய்த நாள்
30
டிச
2013
05:12
ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி 1, வைகுண்ட ஏகாதசி, துவாதசி நாட்களான ஜனவரி 11,12 ஆகிய தேதிகளில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சில மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், மத்திய - மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், நீதிபதிகள் உட்பட பலதரப்பட்ட துறைகளின் வி.ஐ.பி.க்கள் குறிப்பிட்ட தினங்களில் தங்களுக்கும், தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கும் தரிசன ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என சிபாரிசு செய்து வருகின்றனர். இதனால் தேவஸ்தான அதிகாரிகள் இம்முறை மிகவும் கவனமாக செயல்பட உள்ளனர். பக்தர்களுக்கு மகா லகு தரிசனம் ஏற்பாடு செய்வதன் மூலம், சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய முடியும். எனவே, இந்த முக்கிய நாட்களில் மகா லகு தரிசன முறையை தேவஸ்தானம் அமல்படுத்த உள்ளது. இதன்படி, துவார பாலகர்கள் வரை மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய முடியும். மேலும் லட்டு தட்டுப்பாடு இல்லாமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.