மதுரை இஸ்கான் கோயிலில் பகவத்கீதை பிறந்த நாள் விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2013 06:12
சுமார் 5500 வருடங்களுக்கு முன் மோட்ச ஏகாதசி அன்று பகவான் கிருஷ்ணர், அர்ஜூனனுக்கு பகவத்கீதையை உபதேசித்தார். தற்போது ஒவ்வொரு வருடமும் இந்த நாள் பகவத்கீதை பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. கீதை உபதேசிக்கப்பட்ட இடமான குரு÷க்ஷத்திரத்தில் இந்நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இவ்வருடம் இந்த நாள் டிசம்பர் 13ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்நாளில் பகவத்கீதையை படிப்பதும், பகவத்கீதை உபதேசித்த கிருஷ்ணரை வணங்குவதும் மிகவும் சிறப்பிற்குரியது. யார் ஒருவர் தினமும் கீதையின் ஒரு அத்தியாயத்தையோ அல்லது ஒரு ஸ்லோகத்தையோ அல்லது பாதி ஸ்லோகத்தையோ கூட படிக்கின்றாரோ அவர் விரைவில் பகவானின் திவ்ய ஸ்தலத்தை அடைவது உறுதி என்று பத்ம புராணம் கூறுகிறது. மேலும், பகவத்கீதை தினசரி படிக்கப்பட்டு வழிபடப்படும் வீட்டில், பில்லி, சூன்யம், ஏவல் போன்ற தீய வினைகள் நெருங்காது என்று வைஷ்ணவ்ய தந்திர ஸாரம் கூறுகிறது.
பகவத்கீதைக்கு சிறப்பு பூஜைகள்: பகவத் கீதையின் நற்பலன்களை எல்லாம் மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்ற லட்சியத்தில் பகவத்கீதை பிறந்த நாளை உலகம் முழுவதும் இஸ்கான் கொண்டாடியது. மதுரையில் இவ்விழா மணிநகரத்திலுள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் மாலை 6 மணிக்கு நடைபெற்றது. பகவத்கீதைக்கு சிறப்பு பூஜைகளும், கீதாமஹாத்மிய சிறப்புரையும் நடைபெற்றது. கீதையை உபதேசித்த கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.
குறைந்த நன்கொடையில் பகவத்கீதை: கீதை உபதேசிக்கப்பட்ட தினத்தில் கீதையை வாங்கி படிப்பதும், மற்றவர்களை வாங்கச் செய்வதும் அல்லது தானமாகக் கொடுப்பதும் மிகவும் சிறந்தது. பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணர், கீதையின் செய்திகளை யார் ஒருவர் மற்றவர்களுக்கு எடுத்துக் கொடுக்கின்றாரோ, அவரே விட பிரியமானவர் எனக்கு வேறு யாருமில்லை என்று கூறுகிறார். எனவே மக்கள் நலன் கருதி ரூ.300 மதிப்புள்ள பகவத்கீதை உண்மையுருவில் எனும் நூல் நன்கொடை ரூ.150க்கு வழங்கப்பட்டது. இத்துடன் யோகா மற்றும் கீதை குறித்த நான்கு இலவச புத்தகங்களும் வழங்கப்பட்டன. குறைந்த நன்கொடையில் பகவத்கீதை புத்தகங்களை வழங்கிய இந்நிகழ்ச்சியை இஸ்கான் மதுரை கிளையின் தலைவர் அருட்திரு. சங்கதாரி தாஸ் அவர்கள் துவக்கி வைத்தார். பகவத்கீதை புத்தகங்களை வாங்கி பயன்பெறுவதன் மூலம், மக்கள் மத்தியில் நல்ல சிந்தனையும், கீதை, யோகா மீதான தெளிவான விழிப்புணர்ச்சியும் அமையும்.. இதற்கான ஏற்பாடுகளை இஸ்கான் பக்தர்கள் குழு செய்தது.