ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், ஆங்கில புத்தாண்டு மற்றும் அமாவாசையை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையில், அம்மனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் முக்கியமானது. இங்கு சயன நிலையில் காட்சி தரும் மாசாணி அம்மனை தரிசிக்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தருகின்றனர். ஆங்கில புத்தாண்டு மற்றும் அமாவாசையை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு முதலே கோவில் நடை திறந்திருந்தது. மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து, கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவியத் தொடங்கினர். அமாவாசை, புத்தாண்டை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை முதல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர்.