பதிவு செய்த நாள்
02
ஜன
2014
12:01
உத்தமபாளையம்: அனுமந்தன்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில், அனுமன் ஜெயந்தி, புத்தாண்டை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம் செய்தனர். உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் உள்ள அனுமந்தராயப் பெருமாள் கோயிலில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, டிசம்பர் 30,31 ம் தேதிகளில் 2 நாள் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. 16 வகை இனிப்புகள் நைவேத்தியம் செய்து யாகசாலையில் சேர்க்கப்பட்டது. இரண்டுநாட்களும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனுமன் ஜெயந்தி அன்று புத்தாண்டு பிறந்ததையொட்டி, நேற்று அதிகாலை 5 மணி முதல் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலுக்கு வந்த மக்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்தது. கோயில் வளாகத்திற்கு வெளியே உத்தமபாளையம்-கம்பம் தேசிய நெடுஞ்சாலை வரை நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். புத்தாண்டை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் சாத்தப்பட்டது. பல வண்ண மலர்கள் அடங்கிய புஷ்பயாகத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மலர்களால் சன்னதி முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு பூந்தி, வடமாலை, தக்காளி சாதம், தயிர்சாதம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தலைமை பூசாரி வெங்கட்ராமன் யாகசாலை பூஜைகள், புத்தாண்டு சிறப்பு பூஜைகளையும் செய்தார்.
*அல்லிநகரம் ஆஞ்சநேயர் கோயிலில், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பெரியகுளம் பாம்பாற்று பக்த ஆஞ்சநேயர் கோயிலில், வெண்ணை காப்பு, சந்தனக்காப்பு அலங்காரம் உட்பட சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்கப்பெருமாள் கோயிலில், அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. யாகசாலை பூஜைகள் நடந்தது. பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், இளநீர் உட்பட 9 வகை அபிஷேகப்பொருட்களுடன் அபிஷேகம் செய்யப்பட்டது. அனுமனுக்கு தயிர்சாதம், புளியோதரை, பொங்கல் படையல் செய்தும், வடைமாலை, துளசி மாலை சாத்தியும் சிறப்பு ஆராதனை செய்தனர்.
*சக்கம்பட்டி மெயின்ரோட்டில் அனுமன் ஜெயந்தி விழாவில் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்தனர். சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.